Saturday, January 21, 2017

அள்ளிக்கட்டு

அள்ளிக்கட்டு!

*அடக் காவோலைகளே!*
இந்தக் குருத்தோலைகளின் செறுமல் கேளுங்கள்!

*அரசியல் நரிகளே!*
ஆங்காங்கே நின்று வேடிக்கை பாருங்கள்!

நன்றாக நடிக்கத் தெரிந்த *நடிகர்களே!*
உள்ளே வராமல் உங்கள் வேலையைப் பாருங்கள்!

போராட்டத்தையும் புதுமையாய் நடத்தும் புயல்களின் சீற்றம் பாருங்கள்!

சுயநலம் ஒன்றையே
முதலீடாய் கொண்டு
முடியாட்சி செய்யும்
*முயல் கூட்டமே!*

கல்விச்செறிவு கொண்ட
காளையர் போராட்டம்
பாருங்கள்!

*சூழ்ச்சி* செய்து
ஆட்சி செய்யும்
தலைவர்கள் இல்லை!
தொண்டர்கள் மட்டுமே
உலகை உலுக்குகிறார்கள்!

ஐநூறு ரூபாய்க்கும்
அரைத்தட்டு பிரியாணிக்கும்
*பொறுக்கிய* கூட்டமல்ல!

இந்தியச் சுதந்திரத்தின்
இத்தனை கால
இழிவான ஆட்சி கண்டு
பொறுக்காத கூட்டமிது!

*குடி* ஆட்சி
நடத்தும் கூட்டமே!
உங்கள்
தடி ஆட்சி இங்கே
தவிடு பொடியாகும்!

கல்வியறிவில்லாக் *கயவர்களே!*
நீங்கள் *கைரேகை*யிடு முன்னர்
எழுதியிருப்பது
அறியாமையால் வந்த அவலம் பாருங்கள்!

மழையென்ன குளிரென்ன
மாமலையே கடுகாம்!

தமிழுக்கு மட்டுமல்ல!
தமிழனுக்கு மட்டுமல்ல!
இந்த போராட்டம்!
இறுமாந்து நிலலுங்கள்
*இந்தியர்களே!*

இனி இந்தியா
உங்கள் கையில் *அடிமாடல்ல!*
இளைஞர்கள் கையில்
*அணிகலன்!*

இந்தச் சிறு செறுமலுக்கே
அலறி விட்ட ஆந்தைகளே!

முடிந்தால்
ஜல்லிக்கட்டுக் காளைகளை அல்ல
இந்தக் காளையரை அடக்கிப்பாருங்கள்!

உங்கள் அரசியல் வாழ்க்கை *அஸ்தமனமாகி* விடும்!

மாநிலத்தில் சுயாட்சி!
மத்தியில் கூட்டாட்சி!
தமிழகத்தில் *மாணவராட்சி!*

-முன்னாள் மாணவன்-

Friday, December 30, 2016

இந்திய வல்லரசு!!

-*இந்திய வல்லரசு*-

வீறுகொண்டு வா!
வெறுமை போக்கி
வறுமை நீக்கும்
வசந்த வருடமே!
வேகமாக வா!

இலஞ்சமற்ற இலட்சிய பாரதம் உன் வருகைக்காக
விழி பூத்து
வழி நோக்கி
காத்திருக்கிறது!

நாளைய விடியல்
நயவஞ்சகத்தை
ஒழிக்கட்டும்!

நாளைய விடியல்
நன்மையால்
கொழிக்கட்டும்!

நாடெங்கும்
நன்மை நங்கூரமிட்டு
செழிக்கட்டும்!

நாளைய விடியலில்
நம் விழிகள்
இந்திய வல்லரசில்
விழிக்கட்டும்!

பணப்பேய்கள்
பாரதம்
விட்டொழியட்டும்!

எல்லோரும்
இந்நாட்டு மன்னர்
என்று யாவரும்
உணரட்டும்

"நான் இந்தியன்"
எனும் பெருமை
இந்த அகிலமெல்லாம்
ஒலிக்கட்டும்
இந்தியா ஒளிரட்டும்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!
என் உறவுகளே!

Monday, October 1, 2012

பழனிக்கு போனாக்கா !



ஏலே! கவுசிக்!
எங்கடா  ஒங்கப்பன்!

பர்ஸ மறந்து வச்சுட்டு 
பாதியில வுட்டுட்டு போனா 
பொழுது சாயுறதுக்குள்ள 
பழனிக்கு போறதெப்போ?

கோயில் நட சாத்துறதுக்குள்ள 
கோயிலுக்கு போறதெப்போ?


அவுக  பர்ஸ மறந்துட்டு  வந்தா 
அது எல்லாமே நல்லதுக்கு!
நாம எதையாவது விட்டுட்டு வந்தா 
நான் என்னத்த சொல்றதுக்கு?


ராத்திரிக்கு ராத்திரியே 
பெட்ரோலு  போட்டு வெச்சா 
காரை எடுத்துகிட்டு 
காலையிலே போயிருக்கலாம்!


வந்துட்டாக! வந்துட்டாக!
வெரசாவே வந்துட்டாக!
மவராசா காரை எடுங்க! 
மனசு நொந்து போறதுக்குள்ள!


வெள்ளன டிபன் இட்டிலிக்கு சட்டினி 
எள்ளுப்பொடி எண்ணயோட எடுத்து வச்சேன்!
பகலுக்கு புளியோதரை தொவையலோட 
பொல பொலன்னு செஞ்சி வச்சேன்!


வேளா வேளை வித விதமா 
ஆளாளுக்கு ஆக்கிவெச்சா 
நாவ சுழட்டிக்கிட்டு 
நல்லாத்தான் தின்பாக!


நல்லாத்தான் இருந்துச்சுன்னு 
நாலு வார்த்த அவுக சொன்னாக்க 
நாவுல முத்து உதுந்துவிடும்!
நடுத்தல கிரீடம் அவுந்துவிடும்!


பழனி மலையேறி அந்த 
பார்வதி புள்ளைய பார்த்துபுட்டா 
வேலை கிடைக்கணும்னு 
வேண்டுதல சொல்லிபுடலாம்!


பழனிக்கு வரும்போது மணி 
பதுன்னொன்னு ஆகிடுச்சு!
வேலன பார்க்கப்போக 
விஞ்ச் வழி மூடிருச்சு!


ஆனைப்பாதை படியேறி 
பூனைநடை நடந்தேற 
மொதப்பாதி மேல்மூச்சு!
அதில்பாதி கீழ்மூச்சு!


ஒக்காந்து ஒக்காந்து 
ஒசரத்துக்கு போனாக்க 
நடைய சாத்திட்டாக!
நேர்வழி மாத்திட்டாக!


நூறுரூவா டிக்கெட்டு மொகத்துக்கு 
நேரா முருகன பார்க்கலாம்!
பத்து ரூவா டிக்கெட் எடுத்து 
படியோட திருப்பிட்டாக!


பஞ்சாமிர்தமும் பிரசாதமும் 
அஞ்சாறு வாங்கிட்டாக!
பாதசூடு தாங்கலையே! தூக்கிவிட 
ஓடியாங்க! ஐயோ! விழுந்துட்டாக!


கொற கேட்டு கொற கேட்டு 
குமரன் காது செவுடாப்போச்சு!
நேர்ச்ச நேந்து பழநிபோயும் 
என்கொற தீராமப்போச்சு!


ஆண்டிகிட்ட எதகேட்டு 
வேண்டிக்கிட்டு பெறப்போறேன்?
அஞ்சுரூவா அவனுக்குன்னு 
உண்டியல்ல போட்டுட்டு வந்தேன்!


ம்கூம்.... என்னத்த ......?

Friday, July 1, 2011

கல்லறையில் நான் எழுதிய கவிதை !



முத்தெடுத்து தருகின்றேன் முத்தமிழில் முழுகி !
செத்துவிட்ட பின்னாலும் செந்தமிழைத் தழுவி !
கொத்தெடுத்து சூடினாலும் குழல்விட்டு நழுவி 
பத்தினியா போய்விடுவாள் படிதாண்டி வழுவி!


உடலழுகி போவதற்குள் உறவினர்கள் வந்து 
கடலெனவே அழுதாலும் கண்ணீரில் நொந்து 
உடலுருகிப் போனாலும் உந்திவிட்ட பந்து
சடலமென ஆனாலும் சாற்றுகிறேன் சிந்து !


விட்டுவிடு தலையாகி விலகுகிறேன் உலகை!
சட்டியுடைத்த பின்னாலே சந்தனத்தில் பலகை!
தொட்டிலிட்டு எனதுடலை தூக்கியது சிலகை!
மட்டையான உடலத்தில் மாரடிப்பில் பலகை !


நால்வருக்கு நன்றிசொல்ல நானுமங்கு இல்லை!
வாழ்வழிந்த உடலிதுவும் வாடிவிட்ட முல்லை!
ஊழ்வினையை அழிப்பதற்குள் உலகமகா தொல்லை!
காழ்மனமாய் இருந்தாலும் கல்லறைதான் எல்லை!

                                         - செத்து விட்ட முத்து கவி -



( இந்த கவிதை 08-06-1987 அன்று ஒரு தனிமை இரவில் கல்லூரி விடுதி அறையில் எழுதியது  ) 

Saturday, March 5, 2011

யார் சொன்னது ?

யார் சொன்னது ?

உன்னையும் 
உயர்வான மனித இனமென்று . . .  

யார் சொன்னது? 

விலங்கின் அறிவை 
விலை கொடுத்து வாங்கும் . . .

உன்னையும் 
உயர்வான மனித இனமென்று . . .


யார் சொன்னது?

சந்தோஷமென்று எண்ணி 
சாக்கடையில் புரளும் . . .

உன்னையும் 
உயர்வான மனித இனமென்று . . .

யார் சொன்னது?

மனைவியையும் மக்களையும் 
மனதார அனாதையாக்கும் . . .

உன்னையும் 
உயர்வான மனித இனமென்று . . .

யார் சொன்னது?

முகுளத்தை சருகாக்கி 
முடிவாக்கும் முட்டாளான . . .

உன்னையும் 
உயர்வான மனித இனமென்று . . .

யார் சொன்னது?

சம்பாத்தியத்தை  சாராயமாக்கி 
சந்தோசத்தை மாயையாக்கும் . . . 

உன்னையும் 
உயர்வான மனித இனமென்று . . .

யார் சொன்னது?


கருமாதியா?
சாராயம் வேண்டும் !

காத்து குத்து விழாவா ?
சாராயம் வேண்டும் !

கல்யாணமா?
சீமை சாராயம் வேண்டும் !

உன்னை எரிக்க 
எரு வேண்டாம் !
இதத்தனையும் போதும் !



மனைவியின் மஞ்சள் குங்குமத்தை 
மதுவால் அழிக்கும் மாபாவி . . .

உன்னையும் 
உயர்வான மனித இனமென்று . . .

யார் சொன்னது?


அடிமை கழிவே !
உயர்வான வாழ்வை தேடு ! 
உன்மத்த நிலை உன்னை அழிக்கும்!

போதையின் பாதையில் சாவை தேடாமல் 
சாதனைப்பாதையில் வாழ்வை தேடு!

மானிடப்பிறவி அரிதென்ற 
மாபெரும் உண்மை தேடு!

போதையின் பாதை பேதையாக்கும்!
மதுவை தேடாமல் மகிழ்வை தேடு !


இரத்தம் உருக்கி 
உன் தாய் சுரந்தது பாலென்றால் 
இரத்தம் குடிக்கும் 
மதுவை விடு!










Friday, February 11, 2011

மரணம் !







எய்துவது   எய்து !


எல்லோருக்கும் 
எழுதப்பட்ட சாசனம் !

உனக்கு மட்டும் 
இல்லையென்று 
எண்ணுவது நூதனம் !

மரணம் இரசி!
மரணித்தல் சுகம் !
சுகிக்காதவர்க்கு யுகம் !

மரணம் புசி!
வாழ்க்கை பந்தயம் 
வெறும் மரணம் நோக்கித்தான் 
என்பதுணர்!

மரணம் ஒரு தியானம் !
மரணம் ஒரு ஞானம் !

எல்லை மரணம் என்பதால் 
இலக்கை  காதலி !

உலக உருண்டை 
உண்மையில் மரணத்தின் 
திசையில் தானே 
உருள்கிறது!

நிர்மூலமாவது 
மெய்யென்றால் 
மெய்யை பொய்யாக்கு !

மறுமுறை 
உன் உடல் கதவை 
உயிர் தட்டும்போது 
மருத்துவரை அழைக்காதே 
மரணத்தை அழை ! 

உடல் வேலி
உறுதியாய் இருந்தாலும்
இயற்கை
உயிர் உடைத்து
அழுகச் செய்யும் !
இன்னும் இருப்பவர்களை
அழச் செய்யும் !


உடலைப்  புதுப்பிப்பதாய்
உள்ளோர் உளறிக் கொட்டினாலும் 
அஸ்தி தான் அஸ்தம் ! அறி !


உடல் சுகிக்காத 
உணர்வை 
உயிர் சுகிக்கட்டும் !

மரணி !
பிரபஞ்சம்
உனக்குள் அடங்கும் !


Saturday, October 16, 2010

கடவுள் எங்கே? (கண்டால் வணங்குங்கள்)

      கண்ணிலாதான் கண்ட களிறு !
ஹ  .. .ஹ ... ஹ ...ஹ ..
ஹா.. ஹ ..ஹா..... ஹ

தூண் போன்றது !
துடிக்கும் குழல் போன்றது !
கேசமுள்ள கயிறு !
இதுதான் களிறு !

(களிறு = யானை)


நல்லாயன்,
நல்லவன்,
எல்லாம் வல்லவன்,
தூணுள்ளும் துயில்பவன்,
மிகப்பெரியவன் !

பானை வயிறவன் !
பகுதி பாவை இவன் !
குறுக்கிலும் நெடுகிய
கம்பத்தில் குற்றமியற்றிய
கொடும்பாவிகளுக்காய்
குருதி சுரந்தவன்!

சமஸ்கிருதத்தில்
சாய்ந்து உறங்குபவன் !
எபிரேயத்தில்
ஏகாதிபத்தியம்
செய்பவன் !
உதித்தானவன் !
உருதுக்குள் மட்டும்
உறைபவனிவன் !


மெழுகு வர்த்தி,
பேரீச்சம் பழம்,
தேங்காய்,
உப்பு,
பழம் பாயசம் 
காணிக்கையாக
கையேந்துபவன் !

குர் ஆனிலும்
கீதையிலும்
பழைய புதிய
ஏற்பாடுடையவன் !
ஏற்புடையவன் !



தூண் போன்றது !
துடிக்கும் குழல் போன்றது !
கேசமுள்ள கயிறு !
இதுதான் களிறு !


கண்ணிலாதவன் !
காதும் கேளாதவன் !
பிறவி ஊமை !

செத்துப்போனவன் !
செயலற்றவன் !
கல்லறைக்குள்ளிருந்தும்
காசு பார்ப்பவன் !


தூண் போன்றது !
துடிக்கும் குழல் போன்றது !
கேசமுள்ள கயிறு !
இதுதான் களிறு !


சலாமிட்டு
கைகூப்பி
மண்டியிடுபவன் !

குலாம் கலாம்
ஜோசப் பீட்டர்
முனி ஆண்டி !

பானு பேகம்
பாகம்பிரியாள்
இருதய மேரி !

இமயப்பனியுள்
இமையாதுறைபவன் !


கொட்டு முரசு 
கொட்டி 
கோவிலில்
ஆடு வெட்டினால் 
அறியாதவனுக்கு 
அவன் ஆண்டவன் 

ஆட்டுக்கு ......?

கல்லெறிந்து
கருஞ்சைத்தானைக்
கொன்றால் 
கடவுள் காப்பாற்றப்படுவான் 
நெருக்கடியில் 
நொந்து தவிப்பவனை .......?

ரத்தத்தையும் 
சதையையும்  
நாக்குக்கடியில் 
சுவைத்துண்பதால்
சிலுவையில் 
செத்தவன் 
சினம் தணிவதில்லை !

நல்லவர்களும் 
ஞானிகளும் மட்டுமே 
கடவுளை 
காணமுடியுமென்று 
உணரப்பட்டதாக -
உளறப்பட்டதால் 
எல்லோரும் 
தாடி வைக்கிறார்கள் !
ஞானிகளாக 
நடிக்கிறார்கள் !

கேடிகள் 
கோடிகளானதால்
கோவில் உண்டிகள் 
காட்டருவிகளாய்
கொட்டுகின்றன !

ஞானக்குளிப்பு 
நன்றாய் குளித்தாலும் 
மார்பின் குறுக்கே 
மதக்கயிறிட்டாலும்
உறுப்பின் ஒரு முனையை 
உள்ளறுத்தாலும்
கடவுள் இனிமேல் 
கட்டாயம் வரமாட்டான் !


இறைவன் இருந்தால் 
இறைவனாய் நினை !
சடங்கிற்க்குள்
சமாதியாக்கிவிடாதே !


தூண் போன்றது !
துடிக்கும் குழல் போன்றது !
கேசமுள்ள கயிறு !
இதுதான் களிறு !

மதத்துள் 
மயங்காதே !
மனிதனாய் வாழ் !


பயம் 
பற்றிகொள்வதால் தானே 
படைத்தவனை 
வணங்குகிறாய் !

படைத்தவன் 
இறைவனென்றால் 
பெற்றோரை வணங்கு !

இறைவன் 
எங்கும் இல்லை !
உன்னுள் நீ !
                      
                    - கண்ணிலாதவன்-