கண்ணிலாதான் கண்ட களிறு !
ஹ .. .ஹ ... ஹ ...ஹ ..ஹா.. ஹ ..ஹா..... ஹ
தூண் போன்றது !
துடிக்கும் குழல் போன்றது !
கேசமுள்ள கயிறு !
இதுதான் களிறு !
(களிறு = யானை)
நல்லாயன்,
நல்லவன்,
எல்லாம் வல்லவன்,
தூணுள்ளும் துயில்பவன்,
மிகப்பெரியவன் !
பானை வயிறவன் !
பகுதி பாவை இவன் !
குறுக்கிலும் நெடுகிய
கம்பத்தில் குற்றமியற்றிய
கொடும்பாவிகளுக்காய்
குருதி சுரந்தவன்!
சமஸ்கிருதத்தில்
சாய்ந்து உறங்குபவன் !
எபிரேயத்தில்
ஏகாதிபத்தியம்
செய்பவன் !
உதித்தானவன் !
உருதுக்குள் மட்டும்
உறைபவனிவன் !
மெழுகு வர்த்தி,
பேரீச்சம் பழம்,
தேங்காய்,
உப்பு,
பழம் பாயசம்
காணிக்கையாக
கையேந்துபவன் !
குர் ஆனிலும்
கீதையிலும்
பழைய புதிய
ஏற்பாடுடையவன் !
ஏற்புடையவன் !
தூண் போன்றது !
துடிக்கும் குழல் போன்றது !
கேசமுள்ள கயிறு !
இதுதான் களிறு !
கண்ணிலாதவன் !
காதும் கேளாதவன் !
பிறவி ஊமை !
செத்துப்போனவன் !
செயலற்றவன் !
கல்லறைக்குள்ளிருந்தும்
காசு பார்ப்பவன் !
தூண் போன்றது !
துடிக்கும் குழல் போன்றது !
கேசமுள்ள கயிறு !
இதுதான் களிறு !
சலாமிட்டு
கைகூப்பி
மண்டியிடுபவன் !
குலாம் கலாம்
ஜோசப் பீட்டர்
முனி ஆண்டி !
பானு பேகம்
பாகம்பிரியாள்
இருதய மேரி !
இமயப்பனியுள்
இமையாதுறைபவன் !
கொட்டு முரசு
கொட்டி
கோவிலில்
ஆடு வெட்டினால்
அறியாதவனுக்கு
அவன் ஆண்டவன்
ஆட்டுக்கு ......?
கல்லெறிந்து
கருஞ்சைத்தானைக்
கொன்றால்
கடவுள் காப்பாற்றப்படுவான்
நெருக்கடியில்
நொந்து தவிப்பவனை .......?
ரத்தத்தையும்
சதையையும்
நாக்குக்கடியில்
சுவைத்துண்பதால்
சிலுவையில்
செத்தவன்
சினம் தணிவதில்லை !
நல்லவர்களும்
ஞானிகளும் மட்டுமே
கடவுளை
காணமுடியுமென்று
உணரப்பட்டதாக -
உளறப்பட்டதால்
எல்லோரும்
தாடி வைக்கிறார்கள் !
ஞானிகளாக
நடிக்கிறார்கள் !
கேடிகள்
கோடிகளானதால்
கோவில் உண்டிகள்
காட்டருவிகளாய்
கொட்டுகின்றன !
ஞானக்குளிப்பு
நன்றாய் குளித்தாலும்
மார்பின் குறுக்கே
மதக்கயிறிட்டாலும்
உறுப்பின் ஒரு முனையை
உள்ளறுத்தாலும்
கடவுள் இனிமேல்
கட்டாயம் வரமாட்டான் !
இறைவன் இருந்தால்
இறைவனாய் நினை !
சடங்கிற்க்குள்
சமாதியாக்கிவிடாதே !
தூண் போன்றது !
துடிக்கும் குழல் போன்றது !
கேசமுள்ள கயிறு !
இதுதான் களிறு !
மதத்துள்
மயங்காதே !
மனிதனாய் வாழ் !
பயம்
பற்றிகொள்வதால் தானே
படைத்தவனை
வணங்குகிறாய் !
படைத்தவன்
இறைவனென்றால்
பெற்றோரை வணங்கு !
இறைவன்
எங்கும் இல்லை !
உன்னுள் நீ !
- கண்ணிலாதவன்-