Friday, July 1, 2011

கல்லறையில் நான் எழுதிய கவிதை !



முத்தெடுத்து தருகின்றேன் முத்தமிழில் முழுகி !
செத்துவிட்ட பின்னாலும் செந்தமிழைத் தழுவி !
கொத்தெடுத்து சூடினாலும் குழல்விட்டு நழுவி 
பத்தினியா போய்விடுவாள் படிதாண்டி வழுவி!


உடலழுகி போவதற்குள் உறவினர்கள் வந்து 
கடலெனவே அழுதாலும் கண்ணீரில் நொந்து 
உடலுருகிப் போனாலும் உந்திவிட்ட பந்து
சடலமென ஆனாலும் சாற்றுகிறேன் சிந்து !


விட்டுவிடு தலையாகி விலகுகிறேன் உலகை!
சட்டியுடைத்த பின்னாலே சந்தனத்தில் பலகை!
தொட்டிலிட்டு எனதுடலை தூக்கியது சிலகை!
மட்டையான உடலத்தில் மாரடிப்பில் பலகை !


நால்வருக்கு நன்றிசொல்ல நானுமங்கு இல்லை!
வாழ்வழிந்த உடலிதுவும் வாடிவிட்ட முல்லை!
ஊழ்வினையை அழிப்பதற்குள் உலகமகா தொல்லை!
காழ்மனமாய் இருந்தாலும் கல்லறைதான் எல்லை!

                                         - செத்து விட்ட முத்து கவி -



( இந்த கவிதை 08-06-1987 அன்று ஒரு தனிமை இரவில் கல்லூரி விடுதி அறையில் எழுதியது  ) 

Saturday, March 5, 2011

யார் சொன்னது ?

யார் சொன்னது ?

உன்னையும் 
உயர்வான மனித இனமென்று . . .  

யார் சொன்னது? 

விலங்கின் அறிவை 
விலை கொடுத்து வாங்கும் . . .

உன்னையும் 
உயர்வான மனித இனமென்று . . .


யார் சொன்னது?

சந்தோஷமென்று எண்ணி 
சாக்கடையில் புரளும் . . .

உன்னையும் 
உயர்வான மனித இனமென்று . . .

யார் சொன்னது?

மனைவியையும் மக்களையும் 
மனதார அனாதையாக்கும் . . .

உன்னையும் 
உயர்வான மனித இனமென்று . . .

யார் சொன்னது?

முகுளத்தை சருகாக்கி 
முடிவாக்கும் முட்டாளான . . .

உன்னையும் 
உயர்வான மனித இனமென்று . . .

யார் சொன்னது?

சம்பாத்தியத்தை  சாராயமாக்கி 
சந்தோசத்தை மாயையாக்கும் . . . 

உன்னையும் 
உயர்வான மனித இனமென்று . . .

யார் சொன்னது?


கருமாதியா?
சாராயம் வேண்டும் !

காத்து குத்து விழாவா ?
சாராயம் வேண்டும் !

கல்யாணமா?
சீமை சாராயம் வேண்டும் !

உன்னை எரிக்க 
எரு வேண்டாம் !
இதத்தனையும் போதும் !



மனைவியின் மஞ்சள் குங்குமத்தை 
மதுவால் அழிக்கும் மாபாவி . . .

உன்னையும் 
உயர்வான மனித இனமென்று . . .

யார் சொன்னது?


அடிமை கழிவே !
உயர்வான வாழ்வை தேடு ! 
உன்மத்த நிலை உன்னை அழிக்கும்!

போதையின் பாதையில் சாவை தேடாமல் 
சாதனைப்பாதையில் வாழ்வை தேடு!

மானிடப்பிறவி அரிதென்ற 
மாபெரும் உண்மை தேடு!

போதையின் பாதை பேதையாக்கும்!
மதுவை தேடாமல் மகிழ்வை தேடு !


இரத்தம் உருக்கி 
உன் தாய் சுரந்தது பாலென்றால் 
இரத்தம் குடிக்கும் 
மதுவை விடு!










Friday, February 11, 2011

மரணம் !







எய்துவது   எய்து !


எல்லோருக்கும் 
எழுதப்பட்ட சாசனம் !

உனக்கு மட்டும் 
இல்லையென்று 
எண்ணுவது நூதனம் !

மரணம் இரசி!
மரணித்தல் சுகம் !
சுகிக்காதவர்க்கு யுகம் !

மரணம் புசி!
வாழ்க்கை பந்தயம் 
வெறும் மரணம் நோக்கித்தான் 
என்பதுணர்!

மரணம் ஒரு தியானம் !
மரணம் ஒரு ஞானம் !

எல்லை மரணம் என்பதால் 
இலக்கை  காதலி !

உலக உருண்டை 
உண்மையில் மரணத்தின் 
திசையில் தானே 
உருள்கிறது!

நிர்மூலமாவது 
மெய்யென்றால் 
மெய்யை பொய்யாக்கு !

மறுமுறை 
உன் உடல் கதவை 
உயிர் தட்டும்போது 
மருத்துவரை அழைக்காதே 
மரணத்தை அழை ! 

உடல் வேலி
உறுதியாய் இருந்தாலும்
இயற்கை
உயிர் உடைத்து
அழுகச் செய்யும் !
இன்னும் இருப்பவர்களை
அழச் செய்யும் !


உடலைப்  புதுப்பிப்பதாய்
உள்ளோர் உளறிக் கொட்டினாலும் 
அஸ்தி தான் அஸ்தம் ! அறி !


உடல் சுகிக்காத 
உணர்வை 
உயிர் சுகிக்கட்டும் !

மரணி !
பிரபஞ்சம்
உனக்குள் அடங்கும் !