Friday, July 1, 2011

கல்லறையில் நான் எழுதிய கவிதை !



முத்தெடுத்து தருகின்றேன் முத்தமிழில் முழுகி !
செத்துவிட்ட பின்னாலும் செந்தமிழைத் தழுவி !
கொத்தெடுத்து சூடினாலும் குழல்விட்டு நழுவி 
பத்தினியா போய்விடுவாள் படிதாண்டி வழுவி!


உடலழுகி போவதற்குள் உறவினர்கள் வந்து 
கடலெனவே அழுதாலும் கண்ணீரில் நொந்து 
உடலுருகிப் போனாலும் உந்திவிட்ட பந்து
சடலமென ஆனாலும் சாற்றுகிறேன் சிந்து !


விட்டுவிடு தலையாகி விலகுகிறேன் உலகை!
சட்டியுடைத்த பின்னாலே சந்தனத்தில் பலகை!
தொட்டிலிட்டு எனதுடலை தூக்கியது சிலகை!
மட்டையான உடலத்தில் மாரடிப்பில் பலகை !


நால்வருக்கு நன்றிசொல்ல நானுமங்கு இல்லை!
வாழ்வழிந்த உடலிதுவும் வாடிவிட்ட முல்லை!
ஊழ்வினையை அழிப்பதற்குள் உலகமகா தொல்லை!
காழ்மனமாய் இருந்தாலும் கல்லறைதான் எல்லை!

                                         - செத்து விட்ட முத்து கவி -



( இந்த கவிதை 08-06-1987 அன்று ஒரு தனிமை இரவில் கல்லூரி விடுதி அறையில் எழுதியது  )